Tuesday, 12 February 2019

வாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna

தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :)
இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா .
இப்போ எல்லாம் வாராவாரம் வாழைத்தண்டு எங்களுக்கு ரெகுலராக கிடைக்கின்றது என்பதை மைக் போட்டு ஸ்கொட்டிஷ்க்காரங்களுக்கு அறிவித்துக்கொள்கின்றேன் :)

Thursday, 31 January 2019

சிறுகிழங்கு கரேமது/ சிறுகிழங்கு மெழுகுப்பிரட்டி /கூர்க்க கிழங்கு மெழுகுப்பிரட்டி

தேவதையின் சமையல் பக்கத்தில் இன்றைய  சமையல் குறிப்பு ...

சிறுக்கிழங்கு கரேமது  .

                                                                                   
நாம இன்னிக்கு ஒரு விஷயத்தை பார்த்து அது அடுத்த நாளே நமக்கு கண்ணில் பட்டா அதைவிட பேரானந்தம் ஏது :)

அதாகப்பட்டது நேத்து தமிழ் மணத்தில்உலாவிக்கொண்டிருந்தபோது  கண்ணில் பட்டது அமைதிச்சாரல் சாந்தி அவர்களின் இந்த சிறுக்கிழங்கு துவரன் குறிப்பு .இந்த கிழங்கை ஒன்றிரண்டுமுறை இலங்கை தமிழர் கடையிலும் பார்த்திருக்கிறேன் ஆனா சமைக்க தெரிஞ்சாதான் நானா எந்த பொருளையும் வாங்குவேன் ..அதிரா மாதிரி எல்லாத்தையும் வாங்கிவச்சிட்டு ரெசிப்பி தேட மாட்டேன் என்பதை 
இங்கே அனைவர் முன்னும் பதிவு செய்கிறேன் :))))))))))) .அதோடு புது பொருளை பார்த்தா அதோட தமிழ் /மலையாளம் ஹிந்தி ஆங்கில பெயர்கள் மற்றும் அவற்றின் பயன்கள் மருத்துவ குணங்கள் எல்லாவற்றையும் படிச்சிட்டு ஆராய்ந்த பின்னரே அவற்றை கிச்சனுக்கு அழைச்சிட்டு வருவேனாக்கும் :) நேற்று இந்த குறிப்பை பார்த்தபோது ஹையா குறிப்பு இருக்கே இப்போ கிழங்குக்கு எங்கே செல்வேன்னு நினைச்சிட்டு இருந்தேன் .எப்பவும்போல நானும் கணவரும் இன்று காலை வாக்கிங் போகும்போது நம்ம சேட்டன் கடை பக்கமா நடந்திட்டிருந்தோம் ..சரி ஏதாவது காய்கறிகள் வந்திருக்கானு எட்டி பார்க்க அங்கே நம் வாழைத்தண்டு டார்லிங் பெட்டிக்குள்ள அழகா அமர்ந்திருந்தது அதனருகில் ஒரு பெட்டியில் நேத்து அமைதிச்சாரலில் பார்த்த அதே கிழங்கு :) 
                                                                                   
                                                                                       
ஆனாலும் அவசரப்படலை நான் ,கடைக்காரரிடம் கேட்டேன் இது கூர கிழங்கானு அவர் உடனே யெஸ் கூர்க்க கிழங்கு என்று சொன்னார் .உடனே இரு வேளைக்கு தேவையான அளவை எடுத்தாச்சு :)  வீட்டுக்கு கொண்டு வந்து சாந்தி அவர்கள் சொன்ன மாதிரி நகத்தை பயன்படுத்த முடியாது ஏனென்றால் எனக்கு நகம் வளர்ப்பது பிடிக்காது .கோணிப்பையில் போட்டு தட்ட அதுவுமில்லை எனவே ஒரு பழைய புட்டு கவர் பண்ணும் துணியை எடுத்து இந்த கிழங்கைஒவ்வொன்றா  தனியா போட்டு கையால் தேய்க்க இப்படி வந்தது :) 
                                                                                    
                                                                                      

பாருங்க வெளேர்னு வந்தது  .முதலில் அதிரா மாதிரி பிரவுன் கலரில்  இருந்தது துணியால் தேய்த்ததும் ஏஞ்சல் ஆகிடுச்சு :)
                                                                                
                                                                                  
அப்படி வெளேர்னு ஆன சிறுக்கிழங்குகளை கழுவி குட்டியாக வெட்டி நறுக்கி உப்பு மஞ்சள்தூள் சேர்த்து நீர் மூழ்கும்வரை முக்கால்பதம்  வேக வைத்து எடுத்து வைத்தாயிற்று .


                                                                               
இப்போதான் மைண்ட் அலெர்ட் செய்தது சாந்தி அவர்களின் ரெசிப்பியில் நிறைய தேங்காய் சேர்க்கணும்னு சொன்னாங்க .வீட்டில் ஒரு தேங்காய்தான் இருந்தது ஆகவே ரெசிப்பியை நெல்லைத்தமிழன் செய்த உருளை கரேமதுவுக்கு மாத்திட்டேன் :)


இதில் நான் செய்த fusion மசாலா ..சமபங்கு மிளகு சீரகம் ஒரு பல் பூண்டு இவற்றுடன் ஒரு காஷ்மீரி மிளகாய் வற்றல் ப்ளஸ் இரண்டு மற்றவகை மிளகாய் வற்றல் அப்புறம் ஒரு ஸ்பூன் தனியா விதைகள்ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல்  இவற்றை மிக்சியில் அரைத்து அடுப்பை பற்றவைத்து நம்ம பிரிய சட்டியை அதில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கொஞ்சம் உளுந்து சேர்த்து  பொரிந்தவுடன் அதில் அரைத்த மசாலாவை போட்டு பிரட்டி கலந்து ஒரு அரைத்தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து  இரண்டு நிமிடம் மசாலா வாசம் போனபின் முக்கால்பதம் வெந்த சிறுக்கிழங்குகளை மசாலாவுடன் சேர்த்து பிரட்டி 5 நிமிடம் சிம்மில் வைத்தேன் .உப்பு ஏற்கனவே வேகவைக்கும்போது சேர்த்திருப்பதால் இப்போ டேஸ்ட் பார்த்து இன்னும் கொஞ்சூடு மாத்திரம் சேர்த்து பிரட்டி விட்டேன் .

                                                                                  

இதோ யமி சிறுக்கிழங்கு /கூர்க்க கிழங்கு  மெழுகுபிரட்டி தயார் :)
                                                                                
சாம்பார் சாதத்துடன் சாப்பிட்ட எங்க வீட்டு குட்டி எலி சூப்பரோ சூப்பர்னு  வெரி டேஸ்ட்டி என்று சர்ட்டிபிகேட் கொடுத்தது :) 


வேறொரு புதிய சமையல் குறிப்புடன் விரைவில் சந்திப்போம் :)

ஏஞ்சல் .

Friday, 11 January 2019

வாழைத்தண்டு தோசை :) Banana stem Dosa

லண்டன் ஸ்டைல் :)   வாழைத்தண்டு தோசை
================================================

                                                                    

                                                                              

எங்க ஏரியாவில் ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னே ஒரே ஒருதடவை தான எங்களுக்கு வாழைத்தண்டு சுவைக்கும் பாக்கியம் கிடைத்தது :) அதன்பிறகு பூ கிடைத்தாலும் தண்டு கிடைக்கவில்லை .சமீபத்தில் ஒரு புது ஆசியர்  கடை எங்க பகுதியில் ஆரம்பிச்சாங்க .அதன் உரிமையாளர்கள் நம்ம சேட்டன்ஸ் :) வித விதமா இடியாப்பம் மாவு,  பாலக்காட்டு மட்டா  அரிசி, பாகற்காய் ,
வெண்டைக்காய் புடலங்காய் வாழைப்பூவுடன் நானா தேடிட்டிருந்த வாழைத்தண்டும் கிடைக்குது அதில் சூப் ,பச்சடி .பொரியல் எல்லாம் செஞ்சிட்டேன் ..பிறகு கூகிள் ஆன்ட்டி துணையுடன் ஒரு காணொளி செட்டிநாட்டு வாழைத்தண்டு தோசை பார்த்தேன் ,அதை என் ஸ்டைலில் இங்கே உங்களுக்காக :) அளிக்கிறேன் .


                                 


தேவையான பொருட்கள் 
===========================                                                                                 


இட்லி அரிசி ---- 1 கப் 
 அந்த கோப்பையில்  இட்லி அரிசியை போட்டு தலையை தட்டி மிச்சமிருக்கும் இடத்தில கொஞ்சம் பச்சரிசியை போட்டு மூடிடுங்க :)

உளுந்து --------- 2 ஸ்பூன் ( நான் மிக குறைவே சேர்த்தேன் ) 

வெந்தயம் --------- 1/4 தேக்கரண்டி 

துருவிய தேங்காய்  ------ 1/4 கப் 
படத்தில் காண்பித்துள்ள பொருட்களை தேங்காய் தவிர்த்து 
சுமார் 3-4 மணிநேரம் நீரில் ஊறவைக்கவும் .பிறகு  ஜாரில் ஊறவைத்த பொருட்களை நீரின்றி ஒரு  சுற்று  அரைக்கவும் .

                                                                       

                                                                               

பிறகு இத்துடன் சுமார் 10 -15 cm  நீளமுள்ள வட்டமாக அரிந்து நார் நீக்கிய  வாழைத்தண்டு துண்டங்கள் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து அரைக்கவும் ..அரைக்கும்போது தேவையான அளவு நீர் சேர்த்து கொள்ளவும் .
                                                                           

அரைத்து வழித்தெடுத்தவுடன் இதோ இப்படி பொங்கி வரும் 


 இந்த மாவில் சேர்க்க 
உப்பு ----- தேவையான அளவு 

சீரகம் ------ 1 தேக்கரண்டி 

மிளகு ------1/2 தேக்கரண்டி 

கறிவேப்பிலை -- 1 ஆர்க் 

கார விரும்பிகள் :) மிளகாய் இஞ்சி வெங்காயம் சேர்த்துக்கலாம் :)

                                                  தோசை மாவு வித் டெக்கரேஷன்ஸ் :)

                                                                                     
அடுத்தது அடுப்பில் கல்லை வைத்து சுட வேண்டியதுதான் :)
என் வாழைத்தண்டு தோசை கன்னத்தில் குழியோட சிரிக்குது பாருங்க :)                 


                                                                          


                                                                      இது மகளுக்கு :)         


இது கணவருக்காக கொஞ்சம் ப .மிளகாய் வெங்காய தாள் சேர்த்து சுட்டது இந்த தோசையையோ புளிக்க வைக்க தேவையில்லை உடனே சுட்டு சாப்பிடலாம் ..அப்படியே  ரவா தோசை மாதிரி இருக்கு சுவை .
இதை பார்த்தவுடன் கீதாக்காவுக்கு ஒரு திப்பிசம் ஐடியா தோணும் :) விரைவில் எதிர்பார்க்கிறேன் நான் நினைத்ததை நீங்க செய்வீங்க சொல்வீங்கன்னு :)
எங்க வீட்டில் ஸோலார்ப்பேனால் போட்டதால் இரவில் லைட்(  led ) குறைவாவே வரும் வின்டரில் ஆகவே படங்களின் குவாலிட்டிக்கு பொறுத்தருள்க :)

இது நெல்லைத்தமிழனின் ரெசிப்பி எங்கள் ப்ளாகில் வெளிவந்தது 
உருளைக்கிழங்கு கரேமது .உடனே செய்து ரசித்து ருசித்த குறிப்பிலும் இணைச்சாச்சு :)

அடுத்து ஒரு புதிய சமையல் குறிப்புடன் விரைவில் சந்திப்போம் :)

Thursday, 3 January 2019

புடலங்காய் தோசை / Snake Gourd Dosai

சிறு புடலங்காய் தோசை .

இன்று தேவதை கிச்சனில் சிறு புடலங்காயில் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம் .அதற்க்கு முன்னர் வலையுலக நட்புக்கள் அனைவருக்கும் தேவதை கிச்சன் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் :)

Friday, 28 December 2018

ராஜ்கிரா மணிப்புட்டு

ராஜ்கிரா மணிப்புட்டு 

                                                                          
ராஜ்கிராவில் ஏற்கனவே சில குறிப்புகள் செய்திருக்கேன் 

https://kaagidhapookal.blogspot.com/2017/01/blog-post.html


கொஞ்சம் கொசுவத்தி சுத்திட்டு பதிவுக்கு போவோம் 
===========================================================
இந்த மணிப்புட்டு கேரளா சிங்கள  வட இந்திய ரெசிப்பி fusion முறையில் செய்தது .அந்த காலத்தில் இல்லை இல்லை :) நான் ஸ்கூல் படிக்கும்போது மெட்றாஸில் தெருவிற்கு ஒரு மாவு சீயக்காய் அரைக்கும் அரவை நிலையம் இருக்கும் .இப்போ இருக்கானு தெரியலை .அப்போதெல்லாம் வீட்டில் முறுக்கு ,கல் கல் செய்ய புட்டு இடியாப்பம் ஆப்பம் செய்ய தூக்கி வாளி  மூடி போட்டது இருக்கும் அதில் ஊறவைத்து காயவைத்த அரிசி இன்னபிற சாமான்களை அடைத்து வீட்டில் கொடுப்பாங்க நாங்க அரவை நிலையங்களுக்கு கொண்டு போய் அங்கேயே இருந்து அரைச்சிட்டு வருவோம் அப்படிதான் அடுத்த நாள் புட்டு இடியாப்பம் ஆப்பம் செய்வாங்க வீட்டில் .இதை சேமியா புட்டு செய்ய தனி அச்சு மாற்றுவார் அரவை நிலையக்காரர் .சேமியா புட்டில் கேழ்வரகு சேமியா அரிசி சேமியா இரண்டுமே வீட்டில் செய்வாங்க ..
                                              *********************


இப்போ இந்த மணிபுட்டுக்கு வருவோம் என் கணவரின் தங்கை ஒருமுறை இந்த மணிப்புட்டு பற்றி சிலாகித்து சொன்னப்போ அடடே இது நம்மூர் சேமியா புட்டு மாதிரி இருக்கேன்னு தோணி கூகிள் கிட்ட விவரம் கேட்க அதே மணிப்புட்டு கேரளாவிலும் பிரபலம்னு கண்டறிந்தேன் .பிறகு அடிக்கடி அரிசியில் (இடியாப்பமாவு ) மணிப்பூட்டு செய்ய வீட்டில் காலை உணவுக்கு நல்ல வரவேற்பு . பிறகு கொஞ்சம் ஹெல்த்தியா செய்வோமேன்னு ராஜ்கிரா மாவில் செய்து பார்த்தேன் .ஆனால் ராஜ்கிரா மாவு சட்டென குழையும் தன்மை  உடையது அதனால் ஒரு பங்கு ராஜ்கிரா மாவிற்கு கால் பங்கு அரிசி மாவு அதற்கும் குறைய கேழ்வரகு மாவு சேர்த்து  பிட்டு செய்தென் .இந்த கேழ்வரகு ஒரு விளம்பர விரும்பி எந்த பதார்த்தத்தில் சேர்த்தாலும் பீட்ரூட் போல தன்  முகத்தை மட்டுமே பிரதானமாக்கி காட்டும் :) பாருங்க மாவில் கல் பங்குக்கும் குறைவாக சேர்த்தும் எல்லாம் கேழ்வரகு கலருக்கு மாத்தி விட்ருக்கு :)

செய்முறை
============== 

படத்தில் உள்ள அளவுகள் 
                                                                                    

                                                                               
                                                                                                                                                                                                                                                     

                                                                         
ராஜ்கிரா மாவு ---1 கப் 
அரிசி மாவு ---1/4 கப் 
கேழ்வரகு மாவு ---கால் கப்புக்கும் குறைய 

                                                                               இந்த மூன்று மாவுகளை லேசா சட்டியில் சூடேற வறுத்து எடுத்து  கொதிக்க வைத்த தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும் .நீர் கவனமுடன் சேர்க்கணும் வெறும் அரிசி மாவுக்கு பரவாயில்லை ஆனா ராஜ்கிரா குழையும் . குழைத்த மாவை படமெடுக்கும்போது போன் கால் வர அதை படம் எடுக்கமுன் சேவை நாழியில் போட்டு பிழிந்துவிட்டேன் :)
                                                                                                                                                
                                                                         
ஒரு தட்டில் பேப்பர் விரித்து அதில் கண்ணுள்ள பாத்திரத்தை அல்லது சற்று பெரிய துளையுள்ள சல்லடை வைத்து அதில் கொஞ்சம் அரிசி மாவு தூவி பிறகு இடியாப்ப அச்சில் சேமியா சைஸுக்கு துளை உள்ள அச்சு போட்டு படத்தில் காட்டியுள்ளபடி பிழியனும் பிழியும்போதே ஆட்டி ஆட்டி விழ வைக்கணும் .


                                                                                


                                                                               

கையால் பிய்த்து விடலாம் .எல்லா மாவையும் பிழிஞ்சதும் சல்லடையில் மாவு பிழிந்த சேவை மீது பிரட்டினாப்போல சலிச்சு எடுக்கணும் .பிறகு துருவிய தேங்காயை அதில் மேலாக தூவி சேர்த்து  ஸ்டிம் செய்யணும் .லேசா பச்சை மாவு சேர்ப்பதால் ஒட்டாமலிருக்க 8=10 நிமிடம் வேக வைக்கணும் . பிறகு அதில் பிரவுன் சர்க்கரை சேர்த்து பழத்துடன் பாலுடன் சாப்பிட ருசியாக இருந்தது .

                                                                                  


Product image
இந்த மணிப்புட்டை புட்டுக்குட்டி ,குழல் எதிலும் செய்யலாம் .
புட்டுக்குட்டி நான் வீட்டிலே கொட்டாங்குச்சியில் செய்து முகப்புத்தகத்தில் பகிர்ந்தேன் .

Related image

படம் கிடைச்சா போடறேன் :)
மீண்டும் ஒரு புதிய ரெசிப்பியுடன் உங்களை சந்திக்கின்றேன் :)

Wednesday, 26 December 2018

இதோ வந்திட்டேன் :)) vegan Hash Brown //பிரிட்டிஷ் ஹேஷ் பிரவுன்

//இதோ வந்திட்டேன்... இதோ ஏகப்பட்ட ரெசிப்பிக்கள் போடப்போறேன். இதோ தயார் செய்துட்டேன்.. இனி வரிசையா ரெசிப்பிக்கள் ஒவ்வொரு நாளும் வருது... இதோ தேவதை கிச்சனை தூசு தட்டிட்டேன்...

அப்படீன்னு ஒரு மோடிமஸ்தி சொல்லிக்கிட்டே இருக்காங்க. அதனால்தான்.//


ஸ்ஸ்ஸ்ஸ் :) இந்த நெல்லை தமிழனுக்குத்தான் எவ்ளோ ஆவல் என்னுடைய ரெசிப்பிக்களை பார்க்க ருசிக்க :) 
இந்த மாதிரி சந்தர்ப்பத்தை விடுவேனா நான் :) 

பிரிட்டிஷ் ஹேஷ் பிரவுன் உங்களுக்காகவே என்னுடைய தேவதையின் கிச்சனிலிருந்து :)

Sunday, 29 July 2018

ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :)

கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்னாப்சாட் வைபர் வாட்ஸாப் ,ஸ்கைப் என பன்முனையிலிருந்தும் கேள்விக்கணைகள் :)  நிறைய குறிப்புக்கள் இருக்கு ஒவ்வொன்றாக வெளிவரும் என்று எனது சமையல் குறிப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் கோடானுகோடி ரசிகப்பெருமக்களுக்கு அறிவிக்கிறேன் .